நாள் முழுவதும் சிகிச்சை அளிக்காமல் கட்டி போட்டனர் விபத்தில் காயமடைந்த வாலிபர் கோமாவுக்கு சென்ற பரிதாபம்: தஞ்சை அரசு டாக்டர்கள் அலட்சியம்

தஞ்சை: நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ் (21), இவர் கடந்த 9ம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அன்று மாலை பைக்கில் கடைவீதிக்கு சென்று வரும்போது மனோஜ் மீது லோடு ஆட்டோ மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் சாதாரண வார்டில் அனுமதித்ததுடன் முறையான சிகிச்சையும் அளிக்கவில்லை. இதனால் மனோஜ்க்கு கை, கால்கள் உதற தொடங்கியது. முறையான சிகிச்சை அளிக்காமல் குற்றவாளிகளை கட்டி போடுவதுபோல படுக்கையில் கட்டி போட்டு இருந்தனர். மனோஜ் விபத்தில் சிக்கி தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை மறுநாள் தான் தெரிந்து கொண்ட அவரது அக்கா உடனடியாக வந்தார். அங்கு தம்பியின் நிலையை கண்டு அதிர்ந்து போனார். பின்னர் அங்கு பணியில் இருந்த டாக்டரிடம் சென்ற மனோஜின் அக்கா, சிகிச்சை அளிக்காமல் இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதற்கு டாக்டர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மற்றொரு டாக்டர் தன் கடமையை மறந்த நிலையில் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இதை பார்த்த மனோஜின் அக்கா, ‘‘என் தம்பிக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தீர்கள் என்பதை எழுதி கொடுங்கள். தனியார் மருத்துவமனைக்கு தம்பியை கொண்டு செல்கிறேன் என்று கேட்டார். அதற்கு அதையெல்லாம் தர முடியாது என்று டாக்டர் கூறிவிட்டார்.

இந்நிலையில் மனோஜின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மனோஜிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டு ஆத்திரமடைந்தனர். நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து மனோஜின் அக்கா, ‘‘தனக்கு குடும்ப நண்பரான ஒரு டாக்டருடன் செல்போனில் பேசி, அரசு டாக்டருடன் பேசுமாறு கூறியுள்ளார். வெளியில் உள்ள டாக்டர் ஜிஎஸ்சி (உயிர் பிழைக்கும் நிலை) எத்தனை சதவீதம் உள்ளது என கேட்டதற்கு, 3 சதவீதம் தான் உள்ளது என கூறியுள்ளார். அதற்கு முன் மனோஜின் அக்காவிடம் கூறும்போது, 5 சதவீதம் உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆம்புலன்சில் திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட மனோஜ், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தற்போது அவர் கோமா நிலையில் உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>