டென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி : கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரம்

லண்டன்: டென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடரில் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவை கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரமாக வென்று, அதிர்ச்சி அளித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்கும்  டென்னிஸ் சாம்பியன்  ஷிப் போட்டி தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் அகாசி பிரிவில் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ்வுடன் மோதினார். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், நடால் 6-7, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் அரையிறுதி வாய்ப்பை நடால் தக்க வைத்துக்கொண்டார். கடைசி லீக் ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் நாளை இரவு 7.30 மணிக்கு மோதுகிறார்.

அகாசி பிரிவில் நேற்று அதிகாலை நடந்த போட்டியில் 6ம் நிலை வீரரான கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியை சேர்ந்த நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், சிட்சிபாஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-3 எனவும், 2வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். முதல் போட்டியில், டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி இருந்த சிட்சிபாசுக்கு இது 2வது வெற்றியாகும். நடப்பு சாம்பியனை வீழ்த்தி, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

Related Stories:

>