இந்தூரில் ‘இந்திய வேகங்கள்’ மிரட்டல் வங்கதேசம் 150 ரன்னுக்கு சரண்டர் : இசாந்த், உமேஷ், ஷமி, அஸ்வின் அசத்தல்

இந்தூர்: இந்தூரில் நேற்று துவங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய வேகங்களின் அசத்தல் பந்து வீச்சில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த 2 அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் துவங்கியது. டாஸ் ஜெயித்த வங்கதேச அணியின் புதிய கேப்டனான மொமினுல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

துவக்கம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் வங்கதேச அணி வீரர்கள் ரன் எடுக்க திணறினர். துவக்க வீரர்களான இம்ருல் ஹயீஸ், ஷத்மான் இஸ்லாம் இருவரும் தலா 6 ரன்களில் முறையே உமேஷ், இசாந்த் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மொமினுல் ஹக் 37 ரன்களுக்கு அஸ்வின் சுழலில் ‘கிளீன் போல்டு’ ஆனார். அடுத்து வந்தவர்களில் முஸ்பிகுர் ரஹிம் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து ஆடினார். இவர் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 58.3 ஓவர்களில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஷமி 3, இஷாந்த், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி துவக்கத்திலேயே ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. இவர் 6 ரன்னில் அபு ஜெயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் மயங்க் அகர்வால் - செத்தேஸ்வர் புஜாரா ஜோடி மேலும் விக்கெட் விழாமல் சிறப்பாக விளையாடியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

Related Stories:

>