×

இந்தியாவில் முதலீடு செய்ய எல்லையில்லா வாய்ப்புகள் : பிரிக்ஸ் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

பிரேசிலியா: ‘‘இந்தியாவில் எல்லையற்ற, எண்ணிக்கையற்ற தொழில் வாய்ப்புகள் உள்ளதால், பிரிக்ஸ் நாடுகள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்,’’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த கூட்டமைப்பு, ‘பிரிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் 11வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலிமைப்படுத்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.  ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை பிரதமர் மோடி மாநாட்டின் இடையே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: அரசியல் நிலைத்தன்மை காரணமாக இந்தியா திறந்த மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக விளங்குகிறது. இந்தியாவில் எல்லையற்ற, எண்ணிக்கையற்ற தொழில் வாய்ப்புகள் உள்ளதால் பிரிக்ஸ் நாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். உலக பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. 5 நாடுகளுடன் இந்தியாவுக்கான வரி மற்றும் சுங்க தீர்வை முறை எளிமையாக உள்ளது.
தீவிரவாதத்தால் வளர்ந்துவரும் நாடுகளில் 1.5 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

நாஜி வெற்றி விழாவுக்கு ரஷ்யா செல்கிறார் மோடி


பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ேநற்று முன்தினம் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். இது பற்றி மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்தில் இருநாடுகளும் தீவிர ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படையை ரஷ்யா வென்றதன் 75ம் ஆண்டு வெற்றி விழா வரும் மே மாதம் நடைபெறுவதாகவும் அதில் பங்கேற்கும்படி புடின் விடுத்த அழைப்பை ஏற்றுள்ளேன்,’ என கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு மோடிக்கு ஜின்பிங் அழைப்பு


நேற்று முன்தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு சிறப்பாக அமைந்திருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என மோடிக்கு அழைப்பு விடுத்தார். மாமல்லபுரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஒருபோதும் மறக்க முடியாது என தெரிவித்தார்,’ என கூறப்பட்டுள்ளது.

குடியரசு தினத்துக்கு அழைப்பு

பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் ஜேர்  பொல்சோனரோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  அப்போது, அவரை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இந்த  அழைப்பை ஜேர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.  இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் `பிரேசிலுக்கு விசா இன்றி  இந்தியர்கள் பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதற்காக பிரேசில் அதிபர்  பொல்சோனரோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்’’ என்றார்.

Tags : leaders ,India ,BRICS , Unlimited opportunities,invest in India,Prime Minister's invitation , BRICS leaders
× RELATED எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட...