விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் செலவுக்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் வழங்க முடிவு : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், ஓங்கோலில் உள்ள பிவிஆர் பள்ளியில் அன்று, இன்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்களை கொண்ட கமிட்டி அமைத்து, பள்ளியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை அந்த கமிட்டியின் மூலமாக அறிந்து அரசு இணைந்து செயல்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிக்காக 3500 கோடி செலவு செய்யப்பட்டு 45 ஆயிரம் பள்ளிகளின் முகத்தை மாற்றி அமைக்கப்படும். முதல் கட்டமாக 15 ஆயிரத்து 700 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஜூன் 2020ம் ஆண்டிற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். ஜனவரி 9ம் தேதி அம்மாமடி திட்டத்தின் கீழ் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு 15 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதே நேரத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன், விடுதி மாணவர்களின் செலவிற்காக ஆண்டுக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: