தமிழகத்தில் விலையை குறைப்பதாக கூறிக்கொண்டு ரேஷன் கடைகளில் அழுகிய வெங்காயம் விற்பனையால் முகம் சுழிக்கும் மக்கள்: ஊழியர்களே பணத்தை செலுத்த அதிகாரிகள் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு, உணவு துறை அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டார். அமைச்சர்களும் அதிகாரிகளுடன் கடந்த 6ம் தேதி ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து சில்லறை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன் வெங்காயம்தான் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் வெங்காயம் விலை வெளிமார்க்கெட்டில் குறையவில்லை.பின்னர் சென்னையில் வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (சிந்தாமணி) கட்டுப்பாட்டில் செயல்படும் சுமார் 250 ரேஷன் கடைகளிலும், டியுசிஎஸ் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கடைகளுக்கு அந்தந்த பண்டக சாலை மேலாண் இயக்குநர்களே கொள்முதல் செய்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெங்காயம் தரம் இல்லாமலும், அழுகிய நிலையிலும் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வெங்காயம் அனைத்தும் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “ஆந்திராவில் இருந்து தரமில்லாத வெங்காயத்தை கிலோ ரூ.40க்கு கொள்முதல் செய்து ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 2 மூடை (100 முதல் 110 கிலோ) விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மூடையில் 10 கிலோ வெங்காயம் அழுகியும், தரம் இல்லாமலும் இருப்பதால் விற்பனை செய்ய முடியவில்லை. இதற்கான பணத்தை ரேஷன் கடை ஊழியர்களே திரும்ப செலுத்த வேண்டும் என்கிறார்கள். இதனால் ஒவ்வொரு ஊழியர்களும் ரூ.1000 வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனைக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: