பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த ‘அரிசி ராஜா’ யானை பிடிபட்டது: வரகளியாறு முகாம் மரக்கூண்டில் அடைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த அரிசிராஜா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், வரகளியாறு முகாமில் அடைத்தனர்.பொள்ளாச்சியை அடுத்த நவமலையிலிருந்து, சில மாதத்திற்கு முன்பு இடம்பெயர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு ஆண் யானை, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர், ஆண்டியூர் ஆகிய பகுதியில் சுற்றித்திரிந்ததுடன், தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழை மற்றும்  வீடுகளை சூறையாடியது. மேலும், வீடு, ரேஷன் கடைகளில் நுழைந்து அரிசியை தின்று வந்தது. இந்த யானையிடம் சிக்கி கடந்த 9ம் தேதி விவசாயி ராதாகிருஷ்ணன் இறந்தார். திருமாத்தாள் உள்ளிட்ட 2 பேர் காயம் அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்து ரேஷன் அரிசியை வேட்டையாடியதால் யானைக்கு ‘அரிசிராஜா’ என்று பெயரிடப்பட்டது. அரிசி ராஜாவை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் வனத்துறையை சேர்ந்த 100 பேர், அர்த்தநாரிபளையத்தில் கடந்த 10ம் தேதி முகாமிட்டனர். இதற்காக கலீம், பாரி ஆகிய கும்கிகளையும் வரவழைத்தனர். எனினும், யானை வழித்தடம் மாறி போக்கு காட்டி வந்தது. யானையை பிடிக்கும் முயற்சியில் இரவு பகலாக வனத்துறையினர் முகாமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில்,  ஆண்டியூரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், அரிசி ராஜா நிற்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். இரவு 11 மணியளவில், கால்நடை மருத்துவர் சுகுமார் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை யானைக்கு செலுத்தினார். இதனால், அரிசிராஜா பாதி மயக்கத்தில் அங்குமிங்குமாக உலா வந்தது. சிறிதுநேரத்தில் மயக்கமடைந்து நின்றது. இதையடுத்து, 2 மரங்களின் நடுவே யானையை கயிற்றால் கட்டி வைத்தனர். தொடர்ந்து யானைக்கு மயக்கம் தெளிவதுபோன்று இருந்ததால் நேற்று அதிகாலை 5 மணியளவில் மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்கி கலீம் உதவியுடன், காலை 7.30 மணியளவில் யானையை லாரியில் ஏற்றும் பணி நடந்தது. லாரியில் ஏற முரண்டு பிடித்த அரிசி ராஜாவை, அதன்பின்னால் நின்று கும்கி கலீம் முட்டித்தள்ளி லாரியில் ஏற்றியது. சுமார் 10 மணியளவில் டாப்சிலிப்பிலிருந்து  25 கி.மீ. தொலைவில்  உள்ள வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு  மரக்கூண்டில்(கரோல்) அரிசிராஜாவை அடைத்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆண்டியூரில் பிடிபட்ட அரிசிராஜா யானையை பார்க்க அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். யானை பிடிபட்டதும் அவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுமார் 5 நாட்களாக தீவிரமாக போராடி யானையை பிடித்த,  வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வளர்ப்பு யானையாக பராமரிக்க முடிவு

ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் மாரிமுத்து கூறுகையில், ‘‘யானையை, உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்து, சில மாதத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிநிறைவடைந்தவுடன், அந்த யானையை டாப்சிலிப் அருகே கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்து சென்று, அங்கு பிற யானைகளுடன் வளர்ப்பு யானையாக பராமரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>