சென்னை, ஈரோடு, மதுரை உட்பட பல இடங்களில் வேலை வாங்கி தருவதாக 3.5 கோடி மோசடி அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது

சென்னிமலை: சென்னிமலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3.5 கோடிக்கு மேல் மோசடி செய்த அதிமுக நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் உள்பட 9 பேரை சென்னை வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் இளங்கோவன் (48). அதிமுக பிரமுகர். இவர், சிரகிரி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். இவர், வேலை தேடும் இளைஞர்களிடம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை, மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி, ஆசிரியர் பணி உட்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாககூறி ரூ.80 லட்சம் வாங்கி உள்ளார். இதற்கு அதிமுக நிர்வாகிகளான சூளை ராமசாமி, வள்ளி இளங்கோவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால், சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதுதவிர, இவர்கள் மூவரும் சென்னிமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் 43 பேரிடம் ரூ.2 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலியாக அரசு பணி

நியமன ஆணை தயார் செய்து கொடுத்துள்ளனர்.  இதற்கிடையே, சிரகிரி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் விஸ்வேஸ்வரா ஆகியோரிடம் தனது மகன் உட்பட 16 பேருக்கு வேலை வாங்கித் தருமாறு கூறி ரூ.85 லட்சம் வசூல் செய்து கொடுத்ததாகவும், அதேபோல சென்னிமலையை சேர்ந்த வள்ளி இளங்கோவன் என்பவர் 20 பேருக்கு பணி ஆணை பெற்று தர ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்து பார்த்தசாரதி மற்றும் விஸ்வேஸ்வரா ஆகியோரிடம் கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.

இதேபோல், பல்வேறு இடங்களில் இருந்தும் புகார் வந்ததால் இதை  வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை நடந்தது.விசாரணையில், ஈரோடு, திருப்பூர், சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வேலை தேடும் இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.5 கோடி வசூல் செய்ததோடு அந்த இளைஞர்களுக்கு போலியான அரசு பணி நியமன உத்தரவையும் வழங்கி சிரகிரி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன், சூளை ராமசாமி, வள்ளி இளங்கோவன் உள்பட 9 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து சென்னை வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் அந்த 9 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: