தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தமிழக அரசு கடமை தவறிவிட்டது : உச்ச நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

புதுடெல்லி: ‘‘தென்பெண்ணையாற்றில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு எதிரான விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமைகளை செய்ய தவறிவிட்டது’’ என தெரிவித்த உச்சநீதிமன்றம், அதன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் கிளையான தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை தாலுகா, யார்கோல் கிராம பகுதியில் புதிய தடுப்பணையை கர்நாடக அரசு கட்டுவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் பெண்ணையாற்று பகுதியில், தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும்

செய்வதற்கு முன் தமிழக அரசின் ஒப்புதலை பெற அறிவுறுத்த வேண்டும்’’ என கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே மற்றும் உமாபதி ஆகியோர் வாதத்தில், “நதிநீர் சட்ட விதிகளை மீறி பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணைக் கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் பெண்ணையாற்றை கர்நாடகா சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் அவர்களது செயல்பாடு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதனால் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தடை விதிப்பதை தவிர வேறு வழியே கிடையாது’’ என வாதிட்டார்.

இதற்கு கர்நாடகா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்துக்கு பின்னர் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உரிய சட்ட விதிகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இதைத்தவிர பெண்ணையாற்று விவகாரத்தில் பிரச்னையை தீர்க்க தீர்ப்பாயம் அமைப்பது போன்ற எந்த ஒரு கோரிக்கையையும் மத்திய அரசிடம் தமிழக அரசு  கோரிக்கையாக வைக்கவில்லை. அதனை வேண்டுமென்றே தவிர்த்ததுபோல் நீதிமன்றம் கருதுகிறது. மேலும் அணைக் கட்டும் பணிகளை கிட்டத்தட்ட கர்நாடக அரசு முடித்துவிட்டதாக சொல்லப்படக்கூடிய நிலையில் நீதிமன்றத்தால் இந்த தருணத்தில் வேறு எதுவும் செய்ய இயலாது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் தேவையான கோரிக்கைகளை 4 வாரத்தில் மத்திய அரசிடம் அளிக்க தமிழக அரசை அறிவுறுத்துகிறோம். இந்த காரணங்களால் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை விசாரிக்க இயலாது என்பதை சுட்டிக்காட்டி  அவர்களது தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>