குழந்தைகள் தினத்தன்று நடந்த கொடூரம் 9 வயது மகளை டியூப்லைட், செருப்பால் தாக்கிய தந்தை: தெருவில் விரட்டி, விரட்டி அடித்த பரிதாபம்

திருமங்கலம்:  மதுரை மாவட்டம், திருமங்கலம், கொடிமரத்தெருவை சேர்ந்தவர் அப்துல்சமது (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மும்தாஜ் (28). இவர்களுக்கு 9 வயதில் மகளும், 2 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் அப்துல்சமது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 குழந்தைகளையும் தனது வீட்டிற்கு மும்தாஜ் அழைத்துச் சென்றார். ஆனால், மனைவியிடமிருந்து 2 குழந்தைகளையும் அப்துல்சமது தன்னுடன் அழைத்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 9 வயது மகள், தாயை பார்க்கச் சென்றாள்.  இதனை நேற்று காலை அறிந்த அப்துல்சமது மகளை கடுமையாக தாக்கினார். தரையில் பிடித்து தள்ளி விட்டு, காலால் மிதித்து உதைத்தார்.

வலி  தாங்க முடியாமல் தெருவில் ஓடிய குழந்தையை  விரட்டிச் சென்ற அப்துல்சமது டியூப்லைட், செருப்பு என கையில் கிடைத்தவற்றை கொண்டு தாக்கியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்டவர்களை அவதூறாக பேசியுள்ளார். அதே தெருவில் வசிக்கும்  குழந்தையின் தாத்தா, பாட்டியும் தடுக்க முயன்றனர். அவர்களையும் தாக்கியுள்ளார்.சுமார் 20 நிமிடம் நீடித்த இச்சம்பவத்தால் கொதித்து போன தெருமக்கள் திரண்டு அப்துல்சமதுவை தாக்கி குழந்தையை அவரிடமிருந்து மீட்டனர். படுகாயமடைந்த  குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி  திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>