திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 10ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6  மணிக்கு அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, கலெக்டர்  கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:கார்த்திகை தீபத்திருவிழாவை தரிசிக்க சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, 2,500 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களில் இருந்து 6,500 நடைகள் இயக்கப்படும்.

மேலும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல 124 குறைந்த தூர இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். அதோடு, 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசலை  தவிர்க்க, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதலாக 650 சிறப்பு பஸ்கள் மற்றும் தேவையான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். பரணி தீபம் தரிசனத்துக்கு 4 ஆயிரம் பக்தர்கள், மகா தீபத்துக்கு 6  ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க திட்டமிட்டிருக்கிறோம். இணைய தளம் மூலம் ₹1,100 கட்டண தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தீபத்திருவிழாவில் 4 ஆயிரம் போலி பாஸ்: கூட்டத்தில், ஏடிஎஸ்பி வனிதா பேசுகையில், பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கு கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்படுகிறது. 4 ஆயிரம் பேரை  அனுமதிக்க பாஸ் வழங்குகிறோம். ஆனால், 8 ஆயிரம் பேர் வருகின்றனர். சுமார் 4 ஆயிரம் போலி பாஸ் வருகிறது’’ என பரபரப்பு தகவலை வெளியிட்டார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி குறுக்கிட்டு ஒரு பாஸ் வைத்துக்ெகாண்டு  குடும்பத்தினரும் வந்துவிடுகின்றனர். அதனால், இந்த எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது என்றார்.

Related Stories:

>