வேலை இல்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி அரசுப்பணி ஆசைகாட்டி ஆன்லைனில் பகீர் மோசடி: போலி லோகோ மூலம் ஏமாற்றும் கும்பல்

* சிறப்பு செய்தி: ஆன்லைன் மோசடிகள் பல்வேறு நூதன முறைகளில் நடக்கத் தொடங்கியுள்ளன. வேலை தேடும் நபர்களை குறிவைத்து போலி ஆன்லைன் முகவரிகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இவர்களிடம் எச்சரிக்கையாக  இருக்கவேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இந்திய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை தினமும் உயருகிறது.  தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பொறியியல்  பட்டதாரிகள்  உருவாகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 2019 நிலவரப்படி தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பணி வேண்டி  காத்திருப்போரின் எண்ணிக்கையில் 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர் ஆவர். வேலை இல்லா திண்டாட்டத்தால் இவர்களது எதிர்காலம் இருளாகிறது. இந்திய அளவில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக  காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 15 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், கிராமப்புறங்களில் வேலை கிடைக்காத பிற நபர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கு மேல் எனவும் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள்  ெதரிவிக்கின்றன. வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் நூதன மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

சமீபத்தில் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் சம்பளத்துடன் விமான நிலையத்தில் பணி என சமூக வலைதளங்களில் போலியாக அரசு லோகோவுடன் தகவலை பரப்பினர். இதைக்கண்டு பலர் அதில் குறிப்பிட்டிருந்த லிங்க் மூலம் விபரம்  கேட்டுள்ளனர். அதற்கு விண்ணப்பதாரரின் விபரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறும், விண்ணப்ப கட்டணமாக ரூ. 900 முதல் ரூ.1,500 வரை கட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தெரிவித்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது சம்பந்தப்பட்ட நபர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் பேசியுள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு வேலைக்கான எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகே  அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதேபோல் கல்விக்கடன், வேலை தொடர்பாக இணையதளங்களில்  தகவல் தேடுவோரையும் ஆன்லைனில் போலி முகவரி மூலம் ஏமாற்றுபவர்கள் அதிகரித்துள்ளனர். இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், தொலைபேசி மூலம் வங்கியில் இருந்து பேசுவதாகவும், காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வங்கி ஏடிஎம் எண்ணை கேட்டு பணத்தை சுருட்டுபவர்கள் இப்போது மாற்று  வழியில் சுருட்டுகின்றனர்.

இதற்கு இணையதளம், வாட்ஸ்அப் போன்ற வசதிகளை கையாளுகின்றனர். ஆன்லைனில் நாம் எதை தேடுகிறோமோ அது தொடர்பான தகவல்கள் அடுத்த சில நிமிடங்களில் பல கம்பெனி பெயரில் உங்களை தேடி வரும். அதை நீங்கள் நம்பும்  வகையில் போலி லோகோவுடன் ஒரு லிங்க்கும் இடம் பெற்றிருக்கும்.அதில் எதையாவது ஒன்றை உண்மை என நம்பி உள்ளே சென்று உங்கள் தகவல்களை கொடுத்தலோ அல்லது அவர்கள் கேட்கும் முன் தொகையை கட்டினாலோ திரும்ப கிடைக்காது. இவ்வாறு பணத்தை கட்ட சொல்பவர்கள் ஒரு வங்கி  கணக்கு எண்ணை தருகிறார்கள். பணம் அந்த எண்ணிற்கு சென்ற பின்னர், ஏற்கனவே தயாரித்த போலி ஏடிஎம் மூலம் பெரிய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கி தலைமறைவாகி விடுகின்றனர்.இதுபோல் அன்றாடம் பிழைப்பு நடத்தும் சாலையோர கூலிகளிடம் சென்று உங்கள் வங்கி கணக்கு எண்ணை தாருங்கள், அதில் குறிப்பிட்ட தொகை வரும். அந்த தொகையில் உங்களுக்கு கமிஷன் எடுத்துக்கொண்டு எனக்கு மீதி தொகையை  தந்து விடுங்கள் எனக்கூறி அவர்களின் வங்கி கணக்கு எண்ணைப் பெற்று பணம் பறிக்கும் மோசடியும் நடக்கிறது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரித்தால் ஜெய்பூர், மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்துதான் அதிகளவில் ஏமாற்றுக்காரர்கள் இயங்கி இருப்பது தெரியவருகிறது. அடிக்கடி இடம் மாறும் அவர்கள்  பெரும்பாலும் நேரடியாக போலீசில் சிக்குவதில்லை என்றனர்.

கட்டாய ஓய்வு ெகாடுப்பது அதிகரிப்பு

கட்டாய விருப்ப ஓய்வு கொடுப்பது தனியார் துறைகளில் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகரித்துள்ளது. பொருளாதார கொள்கை, பணமதிப்பு வீழ்ச்சி, புதிய வரிவிதிப்புகள் போன்ற காரணங்களால் கார் தொழில் உள்ளிட்ட பெரிய  நிறுவனங்களும் ஆள்குறைப்பு, வேலை நேரம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பணியில் இருப்பவர்களும் பாதியில் வேலை இழக்கும் புதிய அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு பணியிழப்பவர்களும் மோசடி  பேர்வழிகளின் மாய வலையில் சிக்கிவிடுகின்றனர்.

தமிழக அரசில் நான்கரை லட்சம் காலி இடம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு அரசுப்பணிகளில் மட்டும் காலிப்பணியிடங்கள் 4 லட்சத்து 50  ஆயிரத்தை தொட்டுவிட்டது. அரசு துறைகளில் காலியிடங்களை உடனுக்குடன் நிரந்தர நியமனமாக மேற்கொண்டால் இதுபோன்ற போலி நபர்கள் தலையெடுக்க மாட்டார்கள். காலியிடம் தொடர்பாக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து  கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

Related Stories:

>