உள்ளாட்சி தேர்தலில் போட்டி திமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

* போட்டிப்போட்டு விண்ணப்பம்

* வருகிற 20ம் தேதி கடைசி நாள்

* உதயநிதி ஸ்டாலின் போட்டியிட மனு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. ஏராளமானோர் போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக  சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நவம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் திமுகவில் கட்சி ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள்  விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தனர். சென்னையை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் தங்களின் மாவட்டங்களுக்கு உட்பட்டவர்களுக்கு விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தனர்.சென்னை மேயராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சென்னையில் உள்ள நான்கு மாவட்ட செயலாளரிடம் திமுகவை சேர்ந்த ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கி அதற்கான கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். வருகிற 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள்  வாங்கப்படுகிறது. அதன்பிறகு மனுக்களை பரிசீலித்து வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>