×

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்

சென்னை: ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர் முதல் பல்வேறு பதவிகளுக்கான 3 ஆயிரம் காலி பணியிடங்களை வரும் 5ம் தேதிக்குள்  அவசர, அவசரமாக நிரப்பும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் ஆளுங்கட்சியினர் காட்டில் பண மழை கொட்டத்தொடங்கியுள்ளதாக புகார்  எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, அரசு  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில்  மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனால் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத வாக்கில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில்  ஊரகப்பகுதிகளில் ஆளுங்கட்சியின் நிலையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை ஆளும்  தரப்பு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக ஊரக  வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் நிரப்பி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும்  12,524 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 320 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பவும், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்  காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணியிடங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை  நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணி நியமனங்களை ஆளுங்கட்சியின் உள்ளூர்  நிர்வாகிகள் மூலம் நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஊரக  வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பணி நியமனத்தில் ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நியமனங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் முடித்துவிடவும் ஆளும்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.  இதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினர் காட்டில் பணமழை கொட்டுவதற்கான வாயில்  திறந்துவிடப்பட்டுள்ளது.

இது உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காரர்கள் உற்சாகமாக பணியாற்ற உதவும் என்று ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  அதோடு இப்பணி நியமனங்களை டிசம்பர் 5க்குள் முடிக்குமாறும் ஆளும்தரப்பு உத்தரவிட்டுள்ளதால் டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்  தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும்  ஊராட்சி செயலர் சங்கங்களின் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘பல ஆண்டுகளாகவே ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.

இக்கோரிக்கையை எங்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவே வைத்திருந்தோம். குறிப்பாக மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட  ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனை அருகில் உள்ள ஊராட்சி செயலர்கள் கூடுதலாக கவனித்து  வருகின்றனர். அதேபோல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிரைவர் பணியிடங்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள், எழுத்தர் பணியிடங்கள்  காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இப்பணியிடங்களையும் நிரப்பவில்லை. அதேநேரத்தில் பிரதமரின்  வீடு கட்டும் திட்டம், நிதி கையாளுதல், ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் போன்ற பல திட்டங்களுக்கான கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் உட்பட  பல பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன.

இதனால் ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடுகள் நடக்கிறது. இப்பணியிடங்களை முறையான அரசு பணியாட்களாகவே நியமனம் செய்தால்  அவர்களை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பல பணிகளை எங்களால் செய்ய  முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை அவசர, அவசரமாக இப்போது மேற்கொள்வதன்  நோக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே. அதாவது டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும்’ என்றனர்.


Tags : Election ,Government ,Rural Growth Sector , Emergency Appointments in Rural Growth Sector before Local Government Election: Pricing up to Rs 15 lakh
× RELATED சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்...