வர்த்தகம் வெறும் 15% மட்டுமே: தொழில்நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்த வேண்டும்...பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரேசிலியா: உலகப்பொருளாதாரத்தில் 50 விழுக்காட்டை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்  தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாடு:

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின்  தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது. இதில், அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ்  நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும்  விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று காலை பிரதமர் மோடி பிரேசில் சென்றடைந்தார். பிரேசிலியா  விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோக்கு அழைப்பு:

மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை சந்தித்து பேசினார். அப்போது,  பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இது தொடர்பாக  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்து நடத்திய ஆலோசனை  பயனுள்ளதாக இருந்தது. அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள  வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை:

இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, உலகப்பொருளாதாரத்தில் 50  விழுக்காட்டை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகள் வறுமை ஒழிக்க வேகம் காட்ட வேண்டும்  என்றும் தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரிக்ஸ் அமைப்பில்  உள்ள 5 நாடுகளும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவிற்கு நன்றி தெரிவித்தார். நாங்கள் சமீபத்தில் ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கினோம். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் பரிமாற்றம் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிகரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும். உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே என்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.

பயங்கரவாதம், பயங்கரவாத நிதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சந்தேகத்தின் சூழ்நிலை வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பிரிக்ஸ் உத்திகள் என்ற கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Related Stories:

>