சிறைவாசம் தொடருமா? முடியுமா?: ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு...டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை  தீர்ப்பு வழங்குகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு:

கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம்  ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக  அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு  வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல்  வழக்குப்பதிவு செய்தது.

திகார் சிறையில் ப.சிதம்பரம்:

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிபிஐ., சிதம்பரத்தை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கின் கீழ் சிதம்பரத்திற்கு உச்ச  நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இருப்பினும், அமலாக்கத்துறையும் அவரை விசாரித்து வந்ததால் சிதம்பரத்தின் காவல் நீடித்து வந்தது.

மேலும், அக்டோபர் 16-ம்தேதிக்கு பின்னர் சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில்,நேற்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் டெல்லி  நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்கள், அதாவது நவம்பர் 27-ம்தேதி வரைக்கும் நீட்டித்து  டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.

நாளை தீர்ப்பு:

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி  உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனேவே ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் நாளை  தீர்ப்பு வழங்கவுள்ளது. நாளை டெல்லி உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், ப.சிதம்பரம் திகார் சிறைவாசம் முடிவு பெறுமா? இல்லை  தொடருமா? என தெரியவரும்.  

ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் வருத்தம்:

இதற்கிடையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூறுகையில், சிறையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எங்களுக்கு  திருப்தி இல்லை என தெரிவித்தனர். அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறினர். சிறையில் அடைக்கப்பட்டது முதல் இதுவரை 8 முதல் 9  கிலோ உடல் எடை குறைந்துள்ளார் என தெரிவித்தனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளனர். 2016-ல் அவருக்கு சிகிச்சை அளித்த குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டிக்கு தான் சிதம்பரத்தின் உடல்நிலை  குறித்து தெரியும் என தெரிவித்தனர். ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் என்றனர்.

Related Stories: