×

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கை தேவை: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, அந்த மாநிலத்தில் 112 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பாய்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 320 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நதி ஓடி வருகிறது.

இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றினால் மேற்கண்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் துணை புரிகிறது. இந்நிலையில் காவிரியின் துணை ஆறுகளில் எல்லாம் அணைகளைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமல் செய்து வரும் கர்நாடகா, தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் புதிய அணையினைக் கட்டி வருகிறது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக மாநிலம் யார்கோட் என்ற இடத்தில் எழுப்பப்படும் இந்த அணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

நதியின் கீழ்படுகை மாநிலங்களுக்கு அந்த நதிநீரில் உரிமை இருக்கிறது என உலகம் முழுவதும் பின்பற்றப்படும் விதி இதன் மூலம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வாதங்களைப் பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான முறையில் எடுத்து வைக்கவில்லையோ என்கிற கேள்வியும் ஆதங்கமும் எழுந்து வருகிறது. எனவே இயற்கைக்கு எதிரான கர்நாடகாவின் சட்டவிரோத அணை எழுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்த கட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு நதி தனது பயணத்தில் நான்கில் மூன்று பகுதி தூரம் ஓடுகிற மாநிலத்திற்கு எப்படி அந்த நதியில் உரிமை இல்லாமல் போகும் என்பதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

இது மட்டுமின்றி மத்திய அரசின் வழியாக அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசுத் தரப்பில் மேற்கொள்ள வேண்டும். மேலும் 39 மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கிற திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், தமிழகத்தின் நலனைக் காவு கேட்கிற புதிய அணையைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று எப்படியாவது கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Karnataka Dam ,DDV Dinakaran ,Thenpenni River ,building , Legal action, DDV Dinakaran, emphasis on building, blocking Karnataka Dam
× RELATED கர்நாடக அணைகளிலிருந்து காவிரி...