டிச.5-ம் தேதி கர்நாடக இடைத்தேர்தல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் போட்டியிட வாய்ப்பு...முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை

பெங்களூரு: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கர்நாடக இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. பாஜக. முன்னதாக இன்று  காலை தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

17 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம்:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க, பாஜ முயற்சி மேற்கொண்டது. இந்த அரசின் மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள்  கொறடா உத்தரவை மீறி பேரவைக்கு வராமல் இருந்தனர். மேலும்,  ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் தங்களின் எம்எல்ஏ. பதவியையும் ராஜினாமா செய்தனர். இதனால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்   கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் சித்தராமையாவும், மஜத  தரப்பில் குமாரசாமியும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் மனு   கொடுத்தனர்.

அதை பரிசீலனை செய்த ரமேஷ் குமார், காங்கிரசை சேர்ந்த ரமேஷ்ஜார் கிஹோளி (கோகாக்), மகேஷ்குமட்டஹள்ளி (அதானி), ஆனந்த்சிங்   (விஜயநகர்), பிரதாப் கவுடா பாட்டீல் (மஸ்கி), சீமந்த கவுடா பாட்டீல்  (காகவாட்), பி.சி.பாட்டீல் (ஹிரகெரூரு), டாக்டர் கே.சுதாகர்  (சிக்கபள்ளாபுரா),  எம்டிபி நாகராஜ் (ஒசகோட்டை), எஸ்.டி. சோமசேகர்  (யஷ்வந்தபுரம்), பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), ஆர்.ரோஷன் பெய்க்  (சிவாஜி நகர்), முனிரத்னம்  (ராஜராஜேஸ்வரி நகர்), மஜத.வை சேர்ந்த எச்.விஸ்வநாத்  (உன்சூர்), வி.கோபாலையா (மகாலட்சுமி லே அவுட்), நாராயண கவுடா  (கே.ஆர்.பேட்டை)  உட்பட 17 பேரின் எம்எல்ஏ பதவியை பறித்தார். மேலும், இவர்கள் அனைவரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு:

தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட 17 எம்எல்ஏ-க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணா முராரே அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த  வக்கீல் முகுல் ரோத்தகி, காங்கிரஸ் மூத்த  வக்கீல் கபில் சிபல், மஜத சார்பில் ராஜீவ் தவான் ஆகியோர் வாதிட்டனர். பின்னர், தேதி குறிப்பிடாமல்  கடந்த மாதம் 23ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,  ‘சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை முழுமையாக ஆய்வு  செய்தோம். எம்எல்ஏ.க்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் பதவியை ராஜினாமா   செய்திருந்தால் சபாநாயகர் பதவியில் இருப்பவர்கள் அதை அங்கீகரிக்க வேண்டும்.

ஒருவேளை குதிரை வியாபாரம் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியும் பட்சத்தில், அந்த ராஜினாமாவை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது என்பது  சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதன் அடிப்படையில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 பேரின் பதவியை பறித்து சபாநாயகர்  எடுத்துள்ள நடவடிக்கை செல்லும். அதே நேரம், பதவி பறிக்கப்பட்டவர்கள் 2023ம் ஆண்டு வரை தேர்லில் போட்டியிடக் கூடாது என்று சபாநாயகர்  பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது,’என கூறினர்.

பாஜக-வில் ஐக்கியம்:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘‘தீர்ப்பை வரவேற்கிறேன். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ  வெற்றி பெறும். நான் ஏற்கனவே கூறியபடி, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட பாஜ.வில் சீட் கொடுப்பது குறித்து  ஆலோசிக்கப்படும். 17 பேரும் இன்று பாஜ.வில் சேருகின்றனர்,’’என்றார். அதன்படி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17  எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், பாஜக-வில் இணைந்தனர்.

இடைத்தேர்தலில் வாய்ப்பு:

பதவி பறிக்கப்பட்டதால் காலியான 17 தொகுதிகளில், ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளை தவிர மற்ற 15 இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. சபாநாயகரின் தடை காரணமாக, இத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட 17 பேரும் இருந்தனர். உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலில் அவர்கள் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இத்தொகுதிகளில் பதவியை இழந்த 15 பேரும்,  தற்போது பாஜ சார்பில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக இடைத் தேர்தலுக்கான 13 பேர் கொண்ட வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்டு பாஜக இணைந்த எம்எல்ஏ-க்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>