சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன்: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களது கோரிக்கை குறித்து கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம் என தீர்ப்பளித்தனர்.

அதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இன்றைய உத்தரவின் மூலம் இதனால் பெண்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அதனை செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

இந்தநிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.16-ம் தேதி திறக்கப்படுகிறது. 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் விவரங்களையும் ஆன்லைனில் பதவிவேற்றம் செய்துள்ளனர்.

இதனை கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வழிபாடு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு அமலில் உள்ள நிலையில் இவர்களை அனுமதிப்பது பற்றி கேரள போலீஸார் விரைவில் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

Related Stories: