ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை என உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அமைச்சர்கள், கடற்படை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். 

ரஃபேல் வழக்கு:

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையும் தற்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இந்நிலையில், ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக முகாந்திரம் இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே போன்று பிரதமர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், ராகுலை எச்சரித்த உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மத்திய அமைச்சர்கள், கடற்படை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன், இது எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிரூபிக்கிறது. எங்கள்  அரசாங்கத்தின் முடிவெடுக்கும் வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தயாரிப்பு  தொடர்பான விஷயங்கள் அரசியல்மயமாக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன், துரதிர்ஷ்டவசமாக சிலர் அதை தனிப்பட்ட  நலன்களுக்காக செய்தார்கள். அவர்களும் பிரதமரை இழிவுபடுத்த முயன்றனர். இது குறிப்பாக சில மூத்த காங்கிரஸ்  தலைவர்களால் செய்யப்பட்டது என்று நான் கூற விரும்புகிறேன்.

மாஜி விமானப்படை அதிகாரி பி.எஸ்.தனோவா:

எங்களின் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். 2018 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ள இதே தீர்ப்பை  நான் வாக்குமூலமாக அளித்திருந்தேன். ஆனால் அப்போது சிலர், நான் அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், தவறான  கருத்தை கூறுவதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சில  கருத்துக்கள் சொல்லப்பட்டது தவறு.

பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா:

இந்த விவகாரத்தில் சாலை முதல் பார்லி., வரை ராகுலும் அவரது கட்சியும் நாட்டை தவறாக வழிநடத்த முயற்சித்தனர். ஆனால்  உண்மை வெளிப்பட்டுள்ளது. ராகுல் தொடர்ந்து நாட்டிலேயே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் நாட்டு  மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Related Stories:

>