கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பம்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் பாஜக-வில் ஐக்கியம்

பெங்களூரு: கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்காத அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததால், கொறடா உத்தரவை மீறியதாக நடப்பு சட்டப்பேரவைக் காலம் முழுமைக்கும் தகுதி நீக்கம் செய்தார்.

இதனால் பெரும்பான்மை இல்லாததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.  சபாநாயகர் முடிவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், பாஜக-வில் இணைந்தனர். முன்னதாக நேற்று தீர்ப்பு வெளியான நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், பாஜக-வில் இணைய உள்ளதை எடியூரப்பா உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>