தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

டெல்லி: தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை  கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியானது யார்கோல் என்ற கிராமத்தின் வழியாக பாய்ந்து வருகிறது. அப்பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. குறிப்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக தெரிவித்து அனுமதி பெற்றுள்ளனர். அதன்பின்னர் அந்த அணையின் உயரத்தை அதிகரித்து மொத்தமாக அங்குள்ள தண்ணீரை கோலார் மற்றும் பெங்களூர் நகர பகுதிகளுக்கு மாற்றிவிடுவதற்கான திட்டத்தை செயல்படுத்தி வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே  நீர் பங்கீடு தொடர்பான ஒரு பிரதான மனுவானது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கோடு சேர்ந்து ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. யு.யு.லலித் மற்றும் வினித் சரண் அமர்வானது இந்த வழக்கினை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதற்கு தமிழக அரசும் விளக்கம் அளித்திருந்தது. தொடர்ந்து கர்நாடக அரசின் வாதமாக இந்த நதிநீரை உரிமை கோருவதற்கு தமிழகத்திற்கு அதிகாரம்  கிடையாது.  முழுக்க முழுக்க தங்களுடைய மாநிலத்தில் பாய்கிறது. மேலும் இது மார்க்கண்டேய நதி, தென்பெண்ணை ஆற்றின் கிளையில் இருப்பது. இங்கு அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதியை தாங்கள் பெற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசும், தமிழகத்திலும் தென்பெண்ணை ஆறு பாயும் நிலையில், தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இதையடுத்து கடந்த 1892ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறி செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும் குடிநீருக்காக அணை கட்டுவதாக கூறி நதியின் நீர்ப்போக்கை கர்நாடகம் மாற்றியுள்ளது என்று தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்து அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்,  கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories: