ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்: தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் கவனமாக பேச எச்சரிக்கை!

புதுடெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்கா உள்பட பலர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான வழக்கின்  விசாரணையின்போது, முதலில் உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அந்த சமயத்தில், ரபேல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய ராகுல் காந்தி காவலாளியே திருடன் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது என தேர்தல் நேரத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த மீனாட்சி லேகி எம்.பி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தவறுதலாக உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டிவிட்டதாக வருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி அபிடவிட் தாக்கல் செய்தார். அதில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம், விரிவான பதிலளிக்குமாறு கூறி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுக்கு மன்னிப்பு கோரி புதிய அபிடவிட் தாக்கல் செய்வதாக கூறியிருந்தார்.

இதன்பிறகு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (நவம்பர் 14) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என விமர்சித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் ராகுல் காந்தி கவனமாக பேச வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ராகுல்காந்தியின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக பாஜக எம்.பி மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>