ரஃபேல் கொள்முதல் வழக்கு: எந்த முகாந்திரமும் இல்லை என சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ரஃபேல் போர் விமானம் வாங்கியது பற்றி சிபிஐ விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 36 விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை என 2018 டிசம்பர் 14-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமானப் படைக்கு ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எந்த முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு, பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிருந்தன. மேலும் 2016-ம் ஆண்டு ஜனவரி. 26-ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு விசாரித்தனர். மேலும் இந்தாண்டு மே, 10-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படிருந்தனர்.

Related Stories:

>