திருவண்ணாமலையில் அரசை எவ்வாறு அணுகுவது தொடர்பாக பள்ளி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற நிகழ்ச்சி

திருவண்ணாமலை: பழங்குடியின பள்ளி மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாணவ நாடாளுமன்றம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அத்திப்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது.  இக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் அரசியல் அறிவை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது. அதன் ஒருபகுதியாக மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அரசுக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து புரியவைக்கும் வகையில் மாணவ நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் அரசியல் கட்சியினர் கதாபாத்திரங்களில் உரையாடினர். சபாநாயகர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் கதாபாத்திரங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அரசியல் மற்றும் சமுதாய ரீதியான புரிதல்களை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த மாணவ நாடாளுமன்றம் நடத்தப்பட்டதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஷீலா ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் துறைசார் விவாதங்கள் நடைபெறுவதை போலவே தங்கள் அடிப்படை தேவைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பது போலவும், அதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் பதில் கூறுவது போலவும் விவாதங்கள் அமையப்பெற்றன. இதையடுத்து அரசியல் நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்த அடிப்படை புரிதலே இல்லாமல் இருந்த தங்களுக்கு இந்நிகழ்ச்சி மிகபெரிய அனுபவத்தை அளித்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் கூறுகின்றனர். மேலும் அரசியல் குறித்த புரிதல்களை வழங்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் ஆக்கபூர்வமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Related Stories: