×

நிலவின் நிலப்பரப்பை முப்பரிமாண கோணத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள சந்திரயான் 2 வின் ஆர்பிட்டர்: இஸ்ரோ வெளியீடு

பெங்களூரு: சந்திரயான் 2 வின் ஆர்பிட்டர், நிலவின் நிலப்பரப்பை முப்பரிமாண கோணத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும் அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து ஆய்வை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆர்பிட்டரில் டி.எம்.சி 2 என்ற டெர்ரைன் கேமரா, எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சூரியசக்தி எக்ஸ்ரே மானிட்டர், இரட்டை அதிர்வலை ரேடார் உள்ளிட்ட 8 கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் நிலவின் நிலப்பரப்பை சந்திரயான் 2 வின் ஆர்பிட்டர் எடுத்த முப்பரிமாண புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஆர்பிட்டரின் டிஎம்சி 2 என்ற டெர்ரைன் மேப்பிங் கேமரா, நிலவின் நிலப்பரப்பு முழுவதையும் தெளிவான முப்பரிமாண கோணத்தில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்மடங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை இந்த டெர்ரைன் மேப்பிங் கேமரா-2 வழங்கியுள்ளது. நிலவில் பல்வேறு தாக்கங்களால் உருவாகியுள்ள பள்ளங்கள், முகடுகள் என அனைத்தும் அதில் தெளிவாக பதிவாகியுள்ளன. டெர்ரைன் மேப்பிங் கேமரா இரண்டிலிருந்து வரும் மும்மடங்கு தெளிவான படங்களை, டிஜிட்டல் மேம்பட்ட மாதிரிகளாக மாற்றும்போது, அந்த பள்ளத்தின் ஆழம், அளவு உள்ளிட்ட விவரங்களை கொண்டு பள்ளம் எப்படி உருவானது, அதன் வயது, தன்மை, எரிமலைக் குழிகள், எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Tags : Moon, terrain, three-dimensional photo, Chandrayaan 2, Orbiter, ISRO
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...