சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்க நகைகள் கடத்திவரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இந்த கடத்தல் நகைகள் அதிகமாக பறிமுதல் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டுவருகிறது. தங்கம் நேரடியாக விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவதும் இலங்கை சென்று அங்கிருந்து விமானம் மூலமாகவும், கடல் மார்கமாகவும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படுவதும் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் கணக்கில் வராத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவ்விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது திருவாரூரை சேர்ந்த சையத் இப்ராகிம்(36), விருதுநகரை சேர்ந்த அப்துல் அஜீஸ்(56) ஆகியோர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு செல்லவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது பையை சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யூரோ மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த பணத்தின் மதிப்பு சுமார் 45.4 லட்ச ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: