‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்

ஒரு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதை கடந்த 2 பேர் இப்படி பேசிக்குவாங்க... ‘‘என்னப்பா டல்லா இருக்கே...’’ என்பார் ஒருவர். ‘‘சர்க்கரை வந்திருச்சுப்பா... வீட்ல ஓவர் கெடுபிடி. ஜீனியை குறை. ஸ்வீட்டை சாப்பிடாதேன்னு ஓவர் டார்ச்சரு...’’ என்பார் மற்றொருவர். இந்தக்காலத்திலும் இப்படி டயலாக்குகள் ஓடுது. ஆனால், வயது 30 அல்லது 40ஐ தொடுபவர்களே அதிகம் பேசிக்கொள்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி உலகளவில் 45 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2.50 கோடி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்கிறது ஆய்வு. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்த இன்சுலினின் சுரப்பில் ஏற்படும் குறைபாடே சர்க்கரை நோய் எனப்படுகிறது.

அறிந்து கொள்வது எப்படி :  நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? களைப்பாக உணர்கிறீர்களா? பிறப்புறுப்பில் புண், உடலுறவில் ஆர்வமின்மை, எடை குறைதல், பாத எரிச்சல், பார்வை குறைபாட்டை உணர்கிறீர்களா? இவை எல்லாமே நீரிழிவு நோயின் அறிகுறிகள். இதுபோன்று உங்களுக்கு இருந்தால், உடனே டாக்டரை பார்த்து அவரது ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். டாக்டர்கள் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் கட்டாயம் தவறால் எடுத்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சர்க்கரை அளவு கூடி சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தி விடும். பார்வை மங்கும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியா முதலிடம் :  உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 7.50 கோடி பேர் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இது 2 மடங்காக அதிகரிக்கும் என அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. சர்க்கரை ஒரு மரபு நோயாகவும் கருதப்படுகிறது. அப்பா, அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு 80 சதவீதம் வரை வர வாய்ப்புகள் உள்ளன.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 2017ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, 8.8 சதவீத இளம் வயதினருக்கு இன்சுலின் குறைபாடு உள்ளது. சர்க்கரை நோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை ஐதராபாத், கோல்கட்டாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சென்னை மற்றும் மும்பையில் 11 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுப்படி 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 10 - 20 வயதிற்குட்பட்டவர்களையும் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்நோய் குறித்து கட்டாயம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரும்பாலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கு வகைகள், இனிப்புகளை உண்ணக்கூடாது. நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய், நார்ச்சத்துள்ள கீரை வகைகளை கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், பழைய உணவுகளை உண்ணக்கூடாது. தேவைக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது.

நோய் என்று இதை நாம் குறிப்பிட்டாலும், இது இன்சுலின் சுரப்பு குறைபாடு மட்டுமே. மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றினாலும் எந்த பிரச்னையுமின்றி இருக்கலாம். நீண்ட காலம் வாழலாம். டோன்ட் ஒர்ரி... பீ ஹேப்பி.

Related Stories:

>