பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற பிரேசில் அதிபர்: அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயிர் போல்சனோரா பங்கேற்பு

பிரேசிலியா: அடுத்த ஆண்டு (2020) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க உள்ளார். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது. இதில், அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று காலை பிரதமர் மோடி பிரேசில் சென்றடைந்தார்.

பிரேசிலியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை சந்தித்து பேசினார். அப்போது, பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்து நடத்திய ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது. அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>