குற்ற நகரமாக மாறிவரும் திருச்சி: கொலை, கொள்ளை, பலாத்காரம் அதிகரிப்பு

திருச்சி: கொலை, கொள்ளை, பலாத்காரம் அதிகளவில் நடந்து வருவதால், குற்ற நகரமாக திருச்சி மாறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் நம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.19 லட்சம் ரொக்கம், 457 பவுன் நகை, கடந்த அக்டோபர் 2ம் தேதி லலிதா ஜுவல்லரியில் சுவரை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 1ம் தேதி பெல் கூட்டுறவு வங்கியில் ஜன்னலை பெயர்த்து ரூ.1.43 கோடியை மர்ம நபர் திருடிச்சென்றார்.

பஞ்சாப் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் பைக்கில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று முருகனின் கூட்டாளி ஒருவரை பிடித்தனர். இதன்பின்னர் தான், கொள்ளையர்கள் சிக்கினர். அதேசமயம் பெல் கூட்டுறவு வங்கி கொள்ளையர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முகமூடி அணிந்த கொள்ளையனின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தும் அவன் யார், எந்த ஊர் என்ற விவரம் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த 3 கொள்ளை சம்பவங்களும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்கள் ஆகும். இதுதவிர பெண்களிடம் நாள் தோறும் செயின் பறிப்பு, வீடுகளில் கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

கொள்ளை சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பலாத்காரம், கொலை சம்பவங்களும் மறுபுறம் அரங்கேறி, போலீசாருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. கடந்த காணும் பொங்கல் அன்று லால்குடி அருகே உள்ள விரகாலூரை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், நர்சிங் படிக்கும் தனது காதலியுடன், சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். தட்டிக்கேட்ட காதலன் கொலை செய்யப்பட்டார்.

பின்னர், அந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பியோடி போலீசில் சரணடைந்தார். சில மாதங்களுக்கு முன் என்ஐடி மாணவி ஒருவர் இரவில் பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அவரை 2 பேர் மிரட்டி அருகே மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்தனர். அதேபோல் கடந்த இரு வாரங்களுக்கு முன் கொள்ளிடம் பாலத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை போதையில் வந்த கும்பல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதை தடுத்த காதலனை தாக்கி கொள்ளிடம் ஆற்றில் வீசினர். 3 நாள் கழித்து காதலன் சடலம் மீட்கப்பட்டது. இன்று ஏற்கனவே இன்ஜினியரிங் மாணவர் கொல்லப்பட்ட வனப்பகுதிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில், மற்றொரு வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இப்படி திருச்சியில் கொடூ ரமான கொலை சம்பவங்களும், பரபரப்பு கொள்ளை சம்பவங்களும் சமீப காலமாக அடிக்கடி நடந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்குள் போலீஸ் படாதபாடுபட்டு விடுகிறது. போலீசார் முறையாக ரோந்து மேற்கொள்வதில்லை. மேலும் சில போலீசார் கொள்ளையருடன் ரகசிய கூட்டு வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இதனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் திருச்சியில் அடிக்கடி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி அவர்கள் மேலும் கூறுகையில், திருவாரூரில் வாகன சோதனையில் கொள்ளையன் சிக்கி இருக்காவிட்டால், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையர்கள் யார் என்றே தெரிந்திருக்காது. அதேபோல் பெல் வங்கி கொள்யைர்களும் யார் என்றே தெரியவில்லை. இந்த கொள்ளைகள், கொடூர கொலைகள் போலீசுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்காவிட்டால், போலீசார் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இது போன்ற சம்பவங்களை தடுக்க சுற்றுலா மையம், ஆற்றங்கரைகள், காதலர்கள் கூடும் இடம் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இரவில் ரோந்து பணியை துரிதப்படுத்த வேண்டும். மதுரையை தூங்கா நகரம் என்றும், தூத்துக்குடியை முத்து நகரம் என்றும் அழைப்பார்கள். இதே நிலை நீடித்தால், அந்த வரிசையில் திருச்சியை குற்ற நகரம் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். அந்த பெயர் வராமல் தடுக்க வேண்டியதும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டியதும் காவல்துறையினரின் கடமை என்றனர்.

Related Stories: