×

பிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரேசிலியா:  பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது. இதில், அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று காலை பிரதமர் மோடி பிரேசில் சென்றடைந்தார். பிரேசிலியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘பிரிக்ஸ் மாநாடு உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் பொருளாதார இணைப்பை விரிவுபடுத்தும்,’ என மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

ஏற்கனவே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே 2வது அரசு முறையில்லா சந்திப்பு நடந்தது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்திய பொருட்களை சீன இறக்குமதி செய்ய பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாகவும், இரு தரப்பு கூட்டு ஒத்துழைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடி-புடின் சந்திப்பில் ராணுவம், தொழில்நுட்ப துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க உள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக சீனா, ரஷ்யாவை அமெரிக்க எதிர்த்து வரும் நிலையில், அவ்விரு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனிக்கப்படுகிறது.


Tags : Modi ,principals ,conference ,Russian ,Chinese ,BRICS , BRICS conference, China, Russia principals, PM Modi
× RELATED மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர்...