ஐஎஸ்.சின் புதிய தலைவரை கொல்லவும் அமெரிக்கா குறி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் புதிய தலைவருக்கும் அமெரிக்கா குறி வைத்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் வடக்கு சிரியாவில் அவனை அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. இதனால், தனது 2 மகன்களுடன் அவன் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து, இந்த அமைப்புக்கு அபு இப்ராகிம் அல் ஹஷ்மி குரேஷி என்பவன் புதிய தலைவன் நியமிக்கப்பட்டு இருக்கிறான்.இந்நிலையில், நியூயார்க்கில் மேடிசன் சதுக்க பூங்காவில் 100வது அமெரிக்க போர் வீரர்கள் கவுன்சில் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று உரையாற்றினார். அதில் அவர், ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவரையும் அமெரிக்கா தேடி வருகிறது. அவன்  எங்கிருக்கிறான் என்று தெரியும் என்பதால், அவன் நிறைய பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்,’’ என்றார்.

 அவர் மேலும் கூறுகையில், அல் பாக்தாதி கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்தால்  கொல்லப்பட்டான். அவன் இறந்த அடுத்த 2  நாட்களுக்குள்,  குர்திஷ் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், பாக்தாதிக்கு அடுத்த நிலையில் இருந்த 2ம் கட்ட தலைவனான  அபுஹசன் அல் முஜாகிர் கொல்லப்பட்டான். இவன் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐஎஸ் அமைப்பின் செய்தி  தொடர்பாளராகவும், அல் பாக்தாதிக்கு மிக நெருக்கமாகவும் இருந்தவன். இப்போது, இந்த அமைப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவன் யார் என்பதும் எங்களுக்கு தெரியும். அவனை கொல்லவும் அமெரிக்கா குறி வைத்துள்ளது,’’ என்றார்.

புதிய தலைவன் புனைப்பெயர் ‘லிட்டில்’

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருப்பவனின் உண்மை பெயரை, அந்த அமைப்பு வெளியிடுவது கிடையாது. இவர்கள், பழங்குடியினருடன் உள்ள தொடர்பை குறிக்கும் வகையில் தங்களுக்கு புனைப் பெயரை வைத்து கொள்வது வழக்கம். அதன்படி, லிட்டில்’ என்பதுதான் தற்போதைய ஐஎஸ் அமைப்பின் தலைவன் குரேஷியின் புனைப்பெயர் என்பதை டிரம்ப் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

Related Stories:

>