ரூ.700 கோடி பிணை செலுத்தினால் வெளிநாடு செல்ல அனுமதி பாக்.அரசின் நிபந்தனையை நிராகரித்தார் நவாஸ் ஷெரீப்

லாகூர்:  ரூ.700 கோடி பிணைத் தொகை செலுத்தினால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படும் என்ற பாகிஸ்தான் அரசின் நிபந்தனையை ஏற்க அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உள்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றும் அவரது உடல்நிலை சரியாகாததால், வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்கும்படி, நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.இதனால் அவரது குடும்பத்தினர், நவாஸ் ஷெரீப்பை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரது பெயர் வெளிநாடு செல்வோருக்கான தடை பட்டியலில் இருந்தது. எனவே நவாஸ் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கும்படி அரசிடம் அனுமதி கேட்டனர். அரசு இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் தடை பட்டியலில் இருந்து அவரது பெயரை அரசு நீக்கவில்லை. இதன் காரணமாக நவாஸ் வெளிநாடு செல்வதில் சிக்கில் நீடித்து வந்தது.

இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நவாஸ் வெளிநாடு செல்லும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் நவாஸ் ஷெரீப் ₹700 கோடி சொந்த பிணைத்தொகை செலுத்த வேண்டும், சிகிச்சை முடிந்தவுடன் நாடு திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்வேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனைகளுடன் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல அனுமதி அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்பதற்கு நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். நவாஸ் கூறுகையில், “அரசின் இந்த நிபந்தனை சட்டவிரோதமானது. எனது உடல்நிலையை அரசு அரசியலாக்குகின்றது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் இம்ரான் கான் மற்றும் அவரது அரசு தான் இதற்கு பொறுப்பு. உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்நிலையில் இந்த வாய்ப்பை அரசியலாக்க பயன்படுத்திக் கொள்கின்றது” என்றார்.

Related Stories:

>