குல்பூசன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தில் திருத்தம்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூசன் ஜாதவ், மக்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக பாகிஸ்தான் ராணுவ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூசன் ஜாதவ். இவர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக, கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.

 மக்கள் நீதிமன்றங்களின் தலையீட்டை தடுக்கும் ராணுவ சட்டத்தின் கீழ், ராணுவ நீதிமன்றத்தில் குல்பூசன் ஜாதவ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து  கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்தித்து பேச அனுமதிக்கும்படியும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜாதவ் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேச பாகிஸ்தான் அனுமதி அளித்தது.

இந்நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் ஜாதவ் மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் வகையில், தனது நாட்டு ராணுவ சட்டத்தில் திருத்தம் செய்து வருவதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தில் ஜாதவ் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Related Stories:

>