இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தூர்: இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. அடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் (நவ. 22-26), இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பகல்/இரவு டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அந்த போட்டியில் இளஞ்சிவப்பு வண்ணப் பந்து பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி (119 புள்ளி) முதல் இடத்திலும், வங்கதேச அணி (61 புள்ளி) 9வது இடத்திலும் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலிலும் முன்னிலை வகிக்கும் இந்தியா, இந்த தொடரை முழுமையாகக் கைப்பற்றி நம்பர் 1 அந்தஸ்தை மேலும் வலுவாக்கிக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வங்கதேச அணியிடம் தோற்றதில்லை என்பதால், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட்.வங்கதேசம்: மோமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கேயஸ், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா ரியாத், முகமது மிதுன், லிட்டன் குமார் தாஸ், மெஹதி ஹசன் மிராஸ், முஸ்டாபிசுர் ரகுமான், நயீம் ஹசன், சைப் ஹசன், ஷத்மன் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம், அபு ஜாயித், எபதாத் உசேன், மொசாடெக் உசேன் சைகத்.

Related Stories: