பெரும்பான்மையை உறுதி செய்த பிறகே ஆட்சி அமைக்க உரிமை: அதிகாரம் தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டம்...சிவசேனா, காங்.,என்.சி.பி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் தீவிர  ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல்  கடந்த அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது. இதில் பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி  பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை  காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது. இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி  தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க  வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மேலும் கூடுதல் அவகாசம் கோரிய சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதனால் ஆட்சி அமைக்கும் சிவசேனாவின் முயற்சிக்கு  பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த அவகாசம் நேற்று இரவு 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையில்  அந்த கட்சியும் ஆட்சி அமைக்காத காரணத்தால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதற்கு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆட்சி அமைக்க ஆளுநர் கூடுதல் அவகாசம் தர மறுத்ததை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மட்டும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடரும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.  இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அனைத்து தரப்பும் ஆதரவு அளித்தால் மட்டுமே  ஆட்சி அமைக்க உரிமை கோர சிவசேனா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

Related Stories: