×

வரவு-செலவு கணக்கு காட்டாத 1807 தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: வரவு-செலவு கணக்கை சரியாக காட்டாத 1807 தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், பல கோடி மதிப்பில் நன்கொடை பெற்று வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் சரியாக கணக்கு காட்டுவதில்லை என்று புகார் எழுந்தது. இந்தநிலையில், மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களை கணக்கிட தொடங்கியது.

இதனைதொடர்ந்து வருடாந்திர வரவு, செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி விதிமுறை உருவாக்கப்பட்டது. இதன்படி, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவை இதுவரை ரத்து செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு மேலும் 1,807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிறுவனங்கள், கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை பலதடவை நினைவூட்டிய பிறகும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடையை பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், கர்நாடகாவில் உள்ள சுவாமி விவேகானந்தா கல்வி சொசைட்டி, மராட்டிய மாநிலத்தில் உள்ள பாப்டிஸ்ட் கிறிஸ்டியன் அசோசியேசன் ஆகியவையும் அடங்கும். பெங்களூருவை சேர்ந்த இன்போசிஸ் பவுண்டேசன், தானே கேட்டுக்கொண்டதால், அதன் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : NGOs ,Federal Government Action 1807 NGOs Blocking Access , 1807 NGOs blocking access to foreign funds: Federal Government Action
× RELATED வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்:...