சென்னையில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய மனு

டெல்லி : சென்னை காற்று மாசு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு அளித்துள்ளார். தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களை மாசில் இருந்து காப்பாற்ற வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். காற்று மாசு காரணமாக மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சனையை போன்ற கோளாறுகள் உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு

நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் வடக்கில் இருந்து காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. இதன்  காரணமாக சென்னை மாநகர் முழுவதும் கடந்த 3ம் தேதி முதல் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் காற்று மாசு டெல்லியை காட்டிலும் மிஞ்சியது. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டெல்லியை போன்ற நடவடிக்கை சென்னையில் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு சென்னையில் அதிகரித்து  வரும் காற்று மாசு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், செயலாளர்கள் சென்னையில் காற்று மாசு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் காற்று மாசுவில் இருந்து மக்களை காக்க அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் குறிப்பாக சென்னையில் காற்று மாசு குறியீடு என்பது அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு உள்ளது. 50க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாக கருதப்படும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு

இந்த நிலையில் சென்னையில் நிலவும் மோசமான காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காற்று மாசு அதிகரித்துள்ளதால் சென்னை மக்கள் கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் இதனை முறையாக கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து காற்று மாசுவில் இருந்து மக்களை காக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்த மனுவானது விரைவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: