×

என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை செயல்படுத்தாது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை செயல்படுத்தாது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி ரூ.50 கோடி செலவில் நடைபாதை அமைத்துள்ள நிலையில் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி ஆடிட்டர் வந்தனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதை சரியாக பராமரிக்கப்படவில்லை. மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கபட்டுள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எனவே, நடைபாதைகளை சரியாக பராமரிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைப்பதிருப்பதாக கூறிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி இன்று அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அதன்படி, இவ்வழக்கில் சென்னை மாநாகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் என்.எஸ்.சி.போஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை எனக்கூறிய நீதிபதிகள் ஆக்கிரமிப்புகள், நடைபாதை கடைகள் முழுமையாக அகற்றப்படவில்லை என குற்றம்சாட்டினர். அதுமட்டுமல்லாது, என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை செயல்படுத்தாது ஏன்? அங்குள்ள கடைகளை அகற்றாதது ஏன்? ஆர்மேனியம் தெரு முனையில் கோயில், கடைகள் எப்படி அனுமதிக்கப்பட்டது? அங்கு மின் இணைப்பு உண்டா? எப்படி வழங்கப்பட்டது? சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா? என சரமாரி கேள்வியெழுப்பினர். இதையடுத்து, இவ்வழக்கு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நவம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

Tags : Supreme Court ,NSC Bose Road ,High Court , NSC Bose Road, Pavement Commerce, Corporation Commissioner, Supreme Court, Madras High Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...