அமெரிக்காவின் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக நீடா அம்பானி நியமனம்

நியூயார்க்: இந்தியாவின் முதன்மை பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி, அமெரிக்காவில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி  இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள 149 ஆண்டுகள் பழமையான மெட்ரோபொலிடன் அருங்காட்சியக பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகமாகத் திகழும் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட், 149 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். உலகளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட அருங்காட்சியகமும் இதுதான். 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கலையம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருப்பதால் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவரை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகத்திற்கான அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நீட்டா அம்பானிதான் முதன்முறையாக இந்த அருங்காட்சியகத்தில் கௌரவிக்கப்படுகிறார். உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலை, கலாச்சாரத்தை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதில் நீட்டா அம்பானி பெரும் பங்கு ஆற்றியுள்ளதாக டேனியல் புராட்ஸ்கை கூறியுள்ளார். சிறந்த நன்கொடையாளரான நீட்டா அம்பானி, இந்தியாவின் கலை, கலாச்சாரத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்துடன் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: