மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து 300% கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ஜே.என்.யூ : வகுப்புகளுக்கு திரும்பவும் வேண்டுகோள்

டெல்லி: ஜே.என்.யூ பல்கலை.யில் கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது என்றும்  எனவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே சமயம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வை கண்டித்து கடந்த 3 நாட்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

 300 சதவீதம் கட்டண உயர்வு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் சமீபத்தில் விடுதி கட்டணம் 300 சதவீதம்  அளவுக்கு  உயர்த்தப்பட்டது. அதோடு, ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுபாடு  உள்பட பல  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு  தெரிவித்தது. கடந்த ஒரு வாரமாக இந்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து  மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜேஎன்யு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், துணை  ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை  வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது, பட்டமளிப்பு  விழா நடைபெறும் அரங்கை நோக்கி மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல முயன்றனர்.ஆனால்,  அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில்,  மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே மாணவர்கள் பிரச்னை குறித்து  அனைத்து நவம்பர் 15ம் தேதி டீன்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி அளித்தது. இதையடுத்து மாலையில் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.

கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு வாபஸ்

இந்தநிலையில், ஜே.என்.யூ பல்கலை.யில் கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது என்றும் எனவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித்துறைச் செயலாளர் சுப்ரமணியம், ‘இந்த விடுதிக் கட்டண உயர்வு மற்றும் மற்ற சில கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு பொருளாதார உதவி அளிப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்ப வேண்டிய நேரம் இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: