×

2-வது முறை முதல்வராக முடியவில்லை: டுவிட்டரில் 'மகாராஷ்டிராவின் சேவகன்'என பெயர் மாற்றினார் தேவேந்திர பட்நாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம்  21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து  போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு  கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54  இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின.

பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சிஅமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும்   விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பாஜ அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2வது பெரிய கட்சியான   சிவசேனாவுக்கு 24 மணி நேர கெடு விதித்து ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்   கொள்ள சிவசேனா, பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சி   செய்தது.

ஆனால், ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அவ்விரு கட்சிகளும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காததால், ஆளுநர் கோஷ்யாரி, 3வது பெரிய கட்சி   என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு நேற்றிரவு 8.30 மணி வரை கெடு விதித்து நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். இதையேற்று   மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த நவம்பர் 8-ம்  தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பெற்ற மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, தேவேந்திர  பட்நவிஸைகாபந்து முதல்வராக நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் என இருந்த பெயரை பொறுப்பு முதல்வர் என பட்நாவிஸ்  மாற்றினார். ஆனால் தற்போது பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாதாலும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் தனது பெயரை  மகாராஷ்டிராவின் சேவகன் என 2-வது முறையாக மாற்றி உள்ளார்.


Tags : Devendra Patnavis ,Maharashtra's Servant ,Sector of Maharashtra , Devendra Patnavis renamed 'Sector of Maharashtra' on Twitter
× RELATED மகாராஷ்டிரா அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள்...