×

குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்வு: குடிநீர் வடிகால் வாரியம் தகவல்

சென்னை: குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மூலம் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக மோசமான நிலையில் நிலவி வந்தது. இந்த ஆண்டில் நிலவிய கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது. அரசு சார்பில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகக் குடிநீர் சென்னைக்குக் கொண்டுவரப்பபட்டு விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சியும் சென்னைக் குடிநீர் வாரியமும் இணைந்து சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் பலனாக, சென்னை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 2.5 மீட்டர் அளவு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அளித்துள்ள தகவலின்படி 3,00,000 வீடுகளில் மழைநீர் சேமிப்புக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 2,17,000 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. மேலும், சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் 27,000 வீடுகளில் மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்த 320 கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், அதிகபட்சமாக அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.5 மீட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 2 மீட்டர் வரையும், ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2  மீட்டர் வரையும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Nadian , Drinking Water, Rainwater Harvesting, Tamil Nadu, Groundwater, Water Drainage Board
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...