×

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை

சென்னை : காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் பற்றி உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் காவல்துறையிலேயே ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தகவல் கசிந்தது. இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் தொடங்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் முயற்சி செய்கிறது.

ஊழல் புகாருக்குள்ளான டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.,யை அதே பதவியில் இன்னும் இருக்கிறார். இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சகப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக உள்ளது. அதிமுக அரசு, தமிழக காவல்துறையையும் ஊழல் துறையாக மாற்றி வருவது கண்டனத்திற்குரியது, என்று கூறினார்.

மேலும் அவர் அறிக்கையில் கூறியதாவது, 2019 ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த ஊழல் புகார் குறித்து, குட்கா ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போட்டார். பிறகு புதிய டி.ஜி.பி. திரிபாதி பொறுப்பேற்ற பிறகு இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 2019-ல் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர். ஆனால், ஏறக்குறைய 11 மாதங்களாக இந்த புகார் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை.

நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு மட்டுமின்றி, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bribery Department ,Stalin , Police, equipment, abuse, Stalin, reporting, bribery
× RELATED லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு!!