திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை: ஒரு மாத காலத்திற்குள் அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேவஸ்தானம் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார். திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன்  கூட்டரங்கில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகளுடன் தேவஸ்தானம் கூடுதல் நிர்வாக  அதிகாரி தர்மா ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்  கூட்டத்திற்குப் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த தர்மா ரெட்டி “கடந்த மாதம் தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவின்படி  இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றி  ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான அலுவலகங்கள் அனைத்திலும் இன்னும் 15  நாட்களுக்குள் பிளாஸ்ஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது” என்றுக் கூறினார்.

அதே போல் 15 நாட்களுக்குள் திருப்பதி மலையில் ஜல பிரசாதம் என்ற பெயரில் தேவஸ்தானம் திருப்பதி மலையில் விநியோகம் செய்யும்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திருமலையில் உள்ள அனைத்து காட்டேஜ்களிலும் கிடைக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி முழுமையாக வழங்கப்படும்போது முற்றிலும் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடும் தடை செய்யப்படும் “ என்று கூறினார்.

திருமலையில் இருக்கும் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் விநியோகம் செய்யும் ஜலபிரசாதம் குடிநீர்  பக்தர்களுக்கு கிடைக்க செய்ய தேவையான ஏற்பாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனைத்  தொடர்ந்து இன்னும் 30 நாட்களுக்குள் மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும். திருப்பதியில் ஏற்கனவே  பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் விற்பதற்கும் தடை  விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு டோக்கன்களை இடைத்தரகர்கள் குறுக்குவழியில் பெற்று பலனடைந்து  வருவது தெரியவந்துள்ளது. இந்த மோசடியை தடுக்க லட்டு டோக்கன் வினியோகத்தில் பார்கோடு முறை அமலுக்கு கொண்டு வரப்படும்.தேவஸ்தான  அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஏற்ப திருப்பதி மலையில் உள்ள கொவுஸ்துபம், பாஞ்சஜன்யம் ஆகியவற்றின் வாடகை ஆயிரம் ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Related Stories: