கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு! : மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : கழிவுகளை அகற்றும்போது விஷவாயு தாக்கி இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் பலி

சென்னை ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக கழிவுநீர் தொட்டியில், நேற்று அதிகாலை விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூடாது என்பதை முன்னிறுத்தி, 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 9 மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆக்ட் எனப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவாகியுள்ளது. ஒப்பந்ததாரர் தண்டபானியை கைது செய்திருக்கும் போலீசார், சம்பந்தபட்டவர்களை கைது செய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மு.க.ஸ்டாலின் ட்வீட்

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு! இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை!. நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: