புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி: அம்மாநில அரசு அறிவிப்பு

கொல்கத்தா: புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு 19 ஆயிரம் கோடி ரூபாய் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் - வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு புல்புல் புயல் கரையை கடந்தது. முன்னதாக பகல் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக தெற்கு 24 பர்கனாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிதிகளில் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதோடு கனமழை பெய்தது.

நகரின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார ஒயர்கள் அறுந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  புயலின் காரணமாக 2,473 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 26,000 வீடுகள் பகுதியாக சேதமடைந்து உள்ளன. மீனவ நகரங்களான பக்காலி மற்றும் நம்கனா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2.73 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 1.78 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு பர்கனாஸ் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். பசிர்ஹாட் பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். பிராசர்கன்ஞ் ஹர்பாரில் மீனவரின் உடல் ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத மதிப்பு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் என அம்மாநில அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவராண நிதி வழங்கப்படும் என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

Related Stories: