×

டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக காற்று மாசு அதிகமாக உள்ளது. இதனை சரி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு 100-200 என்ற அளவில் இருந்தால் மிதமான பிரிவு, 201 -300 மோசம், 301 -400 மிக மோசம், 401-500 என்ற அளவில் இருந்தால் கடுமையான அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று அதிகாலை, தீவிரம் என்ற அளவுக்கு சென்றது.

இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, புதன்கிழமை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த இரு நாட்களாக காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வயல்வெளிகளுக்கு தீவைக்கப்படுவதால் உருவாகும் புகை டெல்லிக்கு வரத்தொடங்கியதே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் பேரில், 195 பேர் காற்று மாசினால் உயிரிழக்கின்றனர். காற்று மாசைக் கட்டுப்படுத்தினால் உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள மக்களின் சராசரி வயது தற்போது இருப்பதை விட 1.3 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறது ஆய்வறிக்கை. உலகில் மிகவும் மாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் 15 நகரங்கள் தூய்மை இந்தியாவில் தான் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரமாக டெல்லி இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.


Tags : Delhi , Delhi, Air Pollution, Pollution Control Board
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...