×

கால் முறிந்த நிலையில் நடக்க முடியாமல் இருந்த குட்டி யானை பலி

வால்பாறை: வால்பாறை பகுதியில் கால் முறிவுடன், நடக்க முடியாமல் தவித்து வந்த குட்டி யானை பலியானது. வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை வனத்தைவிட்டு வெளியேறி சிறு வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடை, சத்துணவு கூடம் ஆகியவற்றை உடைத்து பெரும் அட்டகாசம் செய்து வந்தது. இதற்கிடையே கடந்த 4 வாரங்களாக தாய்முடி எஸ்டேட், ஆனைமுடி எஸ்டேட்  மற்றும் நல்லமுடி எஸ்டேட் பகுதியில் பிறந்து 8 மாதமே ஆன குட்டி யானையுடன், தாய் யானை ஒன்று மெதுவாக உலா வந்தது. இது குறித்து வனத்துறையினர் நடத்திய ஆய்வில் குட்டி யானையின் பின்னங்காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குட்டியானை மீட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால் குட்டி யானை அருகே யாரையும் நெருங்கவிடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வந்தது. இதனால் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்தனர். இந்நிலையில்  ஆனைமுடி எஸ்டேட்டில்  நேற்று கால் முறிவுடன் காணப்பட்ட  குட்டி யானை பரிதாபமாக இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த  மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வால்பாறை கால்நடை மருத்துவர்  மெய்யரசன் யானை குட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதே பகுதியில் புதைத்தனர். முன்னதாக குட்டி யானை இறந்ததை அறிந்த தாய் யானை வனத்திற்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவத்தனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் குட்டி யானையின்  கால் மற்றும் முதுகெலும்பு இணைப்பு பகுதி உடைந்து சீல் பிடித்திருந்தது  தெரியவந்துள்ளது. இதனால்தான் யானை நடக்க முடியாமல், உணவு மற்றும் தண்ணீர் இன்றி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் குட்டி யானைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் பிழைத்திருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். குட்டி யானை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Elephant
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...