×

நங்கவரம்- காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் தடுப்புகள் இல்லாத ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சியில் உள்ள நெய்தலூர் மற்றும் கட்டாணிமேடு வழியாக விவசாய பாசன வாய்க்காலான மாயனூர் கட்டளை மேட்டுவாய்க்கால் செல்கிறது. இதில் கட்டாணிமேடு பகுதியில் செல்லும் கட்டளை மேட்டுவாய்க்காலானது நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் மிக அருகில் அமைந்து உள்ளது. நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் சுமார் 1 மீட்டரில் இருந்து 3 மீட்டர் வரை இடைவெளியில் சுமார் 10 அடி ஆழத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. மாயனூர் பகுதியில் இருந்து விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரானது கட்டளை மேட்டு வாய்க்காலில் இருபுறங்களிலும் பல கி.மீ தூரம் வரை விவசாய வயல்களில் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் கட்டளை மேட்டு வாய்க்காலில் சுமார் 5 அடி முதல் 7 அடி வரை தண்ணீர் செல்வதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் நெய்தலூர் ஊராட்சி கட்டாணிமேடு வழியாக செல்லும் நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின் ரோட்டின் மிக அருகில் ஆபத்தான நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. ரோட்டில் ஒருசில இடங்களை தவிர ஆபத்தான இடங்கள் மற்றும் ஆபத்தான வாளைவு பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பு தடுப்பு வேலியும் அமைக்காமல், அப்படியே திறந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் இருசக்கரம், கனரக வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வரும் நிலையில், கட்டாணிமேடு அருகே ரோட்டின் வளைவு பகுதியில் எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது பல்வேறு விபத்துகள் நடப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குளித்தலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின்ரோட்டில் உள்ள கட்டாணிமேடு பகுதியில் செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலை ஒட்டி ஆபத்தான பகுதிகளில் மற்றும் ஆபத்தான வாளைவு இடங்களில் இதுவரை தடுப்பு வேலி அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே நெய்தலூர் ஊராட்சி கட்டாணிமேடு பகுதியில் உள்ள நங்கவரம்-காவல்காரன்பட்டி மெயின்ரோட்டில் மிக அருகில் செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலை ஒட்டி, ஆபத்தான பகுதிகள் மற்றும் ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்களில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : road ,Ankwaram - Kavalkaranpatti ,Accident , Accident
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...